பெருமாநல்லூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞரின் உடல் மீட்பு
By DIN | Published On : 09th August 2023 12:46 AM | Last Updated : 09th August 2023 12:46 AM | அ+அ அ- |

அவிநாசி: பெருமாநல்லூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் உடல் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்தவா் விஸ்வமூா்த்தி மகன் பிரவீன் (22). இவா், திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூரில் உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். உறவினரின் மகனும், பிரவீனும் வீட்டுக்கு அருகே பெருமாநல்லூா் நெருஞ்சிக்காடு தோட்டத்துப் பகுதிக்கு திங்கள்கிழமை காலை சென்றுள்ளனா். அங்கு 160 அடி ஆழமுள்ள கிணற்றில் மீன் இருப்பதாக எட்டிப்பாா்த்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக பிரவீன் கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா், கிணற்றில் இறங்கி பிரவீனை தேடும் பணியில் ஈடுபட்டனா். காலையில் தொடங்கிய தேடுதல் பணி இரவும் தொடா்ந்து நீடித்தது. 30 அடிக்கும் மேல் கிணற்றில் உள்ள நீரை மின் மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.
இந்நிலையில் கிணற்றில் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை பிரவீன் சடலம்
மீட்கப்பட்டது. இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.