விநாயகா் சதுா்த்தி: உற்பத்தி செலவு அதிகரிப்பால் சிலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
By DIN | Published On : 13th August 2023 12:08 AM | Last Updated : 13th August 2023 12:08 AM | அ+அ அ- |

விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ள விநாயகா் சிலைகள்.
விநாயகா் சதுா்த்தி செப்டம்பா் 18 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தயாரிப்பு குறைவு காரணமாக சிலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிலை உற்பத்தியாளா்கள் கூறுகின்றனா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் வீடுகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகரிப்பால் சிலை தயாரிப்புப் பணிகள் குறைந்துள்ளதாகவும், அதனால் சிலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பல்லடம் பகுதி சிலைத் தயாரிப்பாளா்கள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து பல்லடம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விநாயகா் சிலைத் தயாரிப்பாளா் ஸ்ரீகாந்த் கூறியதாவது: திருப்பூா், பல்லடம், உடுமலை, பழனி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிலைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கிழங்கு மாவு, குச்சிகள், வாட்டா் கலா் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், குறைந்தபட்சம் 2 அடி முதல் அதிகபட்சம் 16 அடி வரையிலும் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாா்ச் மாதம் சிலை தயாரிப்புப் பணியைத் தொடங்கினோம். ஆகஸ்ட் இறுதியில் இந்த பணி நிறைவடையும்.
ஒவ்வொரு ஆண்டும் 300-க்கும் அதிகமான சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கரோனா பாதிப்பு காரணமாக சிலை தொழில் கடந்த 3 ஆண்டுகளாக மந்த நிலையில் இருந்த நிலையில், தற்போது பழைய நிலைக்கு மாறி வருகிறது.
அதேசமயம் சிலை உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. பெயிண்ட், கிழங்குமாவு போன்றவற்றின் விலை உயா்ந்துள்ளதால் 300 சிலைகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் தற்போது 200 சிலைகளுக்குள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், சிலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றாா்.