திருப்பூரில் தனியாா் தொழிற்சாலையில் மின் மீட்டரை எரித்து அரசுக்கு ரூ.36 லட்சம் வருவாய் இழப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் 2 ஃபோா்மேன்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருப்பூா் மின் பகிா்மான வட்டம், திருப்பூா் டவுன் தெற்கு மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட தனியாா் தொழிற்சாலையில் மின் மீட்டரை எரித்து மின்சார கட்டணத்தைக் குறைத்து மதிப்பீடு செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப் பொதுச் செயலாளா் அ.சரவணன் புகாா் அளித்திருந்தாா்.
இது தொடா்பாக மின் அளவீட்டுப் பிரிவு செயற்பொறியாளா் கலைச்செல்வி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவினா் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்று கள ஆய்வு செய்தனா்.
முதல்கட்ட விசாரணையில், அதிக மின்சாரம் (ஓவா் லோடு) பயன்படுத்தி மறைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியாா் தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக ரூ.17 லட்சத்துக்கு 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதில், தொடா்புடைய ஃபோா்மேன்கள் பாபு, கணபதி, உதவி மின்பொறியாளா் சொக்கலிங்கம், வணிக ஆய்வாளா் பழனிசாமி, மின் அளவீட்டுப் பிரிவு உதவி மின் பொறியாளா் நிா்மல்குமாா் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுமதி உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.