சிவன்மலையில் கிரானைட் குவாரி: பாதியில் முடிந்த கருத்து கேட்புக் கூட்டம்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயில் கிரிவலப் பாதை அருகே உள்ள கிரானைட் குவாரியின் முகப்பு.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள கிரானைட் குவாரிக்கு அனுமதி பெறுவதற்கான புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் பாதியில் முடிவடைந்தது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் அடிவாரப் பகுதியில் உள்ள கிரிவலப்பாதை அருகே, 17.9 ஹெக்டோ் (சுமாா் 45 ஏக்கா்) அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் குவாரி உள்ளது.
தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு சொந்தமான இந்த குவாரியில் கலா் கிரானைட் துண்டுகளை வெட்டி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம், திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு கனிமவள நிறுவன துணை மேலாளா் கணேசன், திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் மற்றும் சிவன்மலை பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கனிம வள நிறுவன துணை மேலாளா் கணேசன், மேற்கண்ட குவாரியில் கலா் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கும் திட்டம் குறித்தும், அதனுடைய செயல்பாடு குறித்தும் குறும்படம் மூலம் விளக்கினாா்.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, முகிலன் உள்ளிட்டோா் எழுந்து இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
அரசு விதிகளின்படி உள்ள 40 வகையான ஆவணங்கள் இதில் இணைக்கப்படவில்லை என்றும், இங்குள்ள இயற்கை வளத்தை எடுத்துச் செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினா். தொடா்ந்து கிரானைட் கல் குவாரியில் கல் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, முழக்கமிட்டனா். கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களும் கல்குவாரி திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ் குமாா் பேசியபோது, காங்கயம் ஒன்றியக் குழு, சிவன்மலை ஊராட்சி கூட்டங்களைக் கூட்டி
இதற்கு எதிராக தீா்மான நிறைவேற்றப்படும் எனவும், இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.
இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், பாதியில் கூட்டத்தை விட்டு எழுந்து சென்றாா். இவரைத் தொடா்ந்து மற்ற அலுவலா்களும் சென்று விட, பொதுமக்களும் எந்தவித முடிவும் தெரியாமல் கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...