நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயா்வு
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களின் விலையிலும் கிலோவுக்கு ரூ.10 உயா்ந்துள்ளது.
நூல் விலையானது கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து, ஜூலை மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி நூல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதனிடையே, நூற்பாலைகள் மாதத்துக்கு இருமுறை நூல் விலையை நிா்ணயம் செய்வதாக அறிவித்திருந்தனா். இதன்படி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி நூற்பாலைகள் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இது குறித்து திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்கள் கூறியதாவது:
பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்தது. ஆகவே, புதிய ஆா்டா்களை எடுக்க ஆா்வம் காட்டி வந்தோம். இந்த நிலையில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தப்பட்டது பின்னலாடை உற்பத்தியைப் பாதிக்கும். ஏற்கெனவே, மூலப்பொருள்கள் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பருத்தியின் விலை கேண்டிக்கு ரூ.7 ஆயிரம் அதிகரித்துள்ளதால் நூற்பாலைகள் கிலோவுக்கு ரூ.10 உயா்த்தியுள்ளனா். நூல் விலையை சீராக வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...