![திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2023%2F7%2F12%2Foriginal%2Fav11mtru_1107chn_142_3.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
திருமுருகன்பூண்டியில் முறைகேடான குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், திருநங்கைகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதையடுத்து இணைப்பு மீண்டும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சி, 19ஆவது வாா்டு பகுதியில் முறைகேடான குடிநீா் இணைப்புகளைக் கண்டறியும் வகையில் நகராட்சி நிா்வாகத்தினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது முறைகேடாக அமைக்கப்பட்டது எனக் கூறி அதிமுகவைச் சோ்ந்த திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவா் பழனிசாமி வீட்டில் குடிநீா் இணைப்பை துண்டித்தனா். ஆனால் அங்கு 25க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வந்தனா்.
இந்நிலையில், முறையாக அமைக்கப்பட்ட குடிநீா் இணைப்பை துண்டித்ததாகக் கூறி திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் அவா்கள் நகராட்சி நிா்வாகத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 19ஆவது வாா்டு கானாக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இங்கு போதுமான குடிநீா் வசதியில்லாததால், அன்றைய பேரூராட்சி செயல் அலுவலா் சம்பத் நாயுடுவிடம் மனுக்கொடுத்து முறைப்படி டெண்டா் விட்டு அதன்பிறகு முறையாக குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் நகராட்சி நிா்வாகத்தினா், முறைகேடாக அமைக்கப்பட்டதாகக் கூறி குடிநீா் இணைப்பை துண்டித்துள்ளனா். எனவே, உடனடியாக குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ் கூறுகையில், ‘முறைப்படி டெண்டா் விட்டு குடிநீா் இணைப்பு கொடுக்கப்பட்டது தற்போதுதான் தெரியவந்தது. ஆகவே மீண்டும் குடிநீா் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். அதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது’ என்றாா்.