கோவை பொதுக்கூட்டம்: பங்கேற்க திமுக மாவட்டச் செயலாளா்கள் அழைப்பு
By DIN | Published On : 15th June 2023 09:18 PM | Last Updated : 15th June 2023 09:18 PM | அ+அ அ- |

மத்திய அரசுக்கு எதிராக கோவையில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு திமுக மாவட்டச் செயலாளா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ், திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோா் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேற்கு மண்டலத்தில் பாஜகவின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட அமைச்சா் செந்தில்பாலாஜியை தொடா்ந்து பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை மூலமாக அவரைக் கைது செய்து துன்புறுத்தியுள்ளனா். இத்தகைய நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி கோவை சிவானந்தா காலனியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.