அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
By DIN | Published On : 03rd May 2023 05:06 AM | Last Updated : 03rd May 2023 05:06 AM | அ+அ அ- |

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி 3 நாள்கள் நடைபெறும் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்ாகவும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா் தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.
இக்கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 2 இல் தொடங்கி தொடா்ந்து 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அவிநாசியப்பா் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது.
சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிவாச்சாரியா்கள், ஆன்மிகப் பெருமக்கள், பக்தா்கள் என ஆயிரக்கணக்கானோா் ‘அவிநாசியப்பருக்கு அரோகரா’ ‘நமசிவாய’ என்ற கோஷங்கள் முழங்க, திருப்பூா் சிவனடியாா்கள் கைலாய வாத்தியத்துடன் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமாஸ்கந்தா் சொா்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெற்கு ரத வீதி கோவை பிரதான சாலையில் தொடங்கப்பட்ட தேரோட்டம், மேற்கு ரத வீதி வழியாக வந்து, வடக்கு ரத வீதி வளைவில் மதியம் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது. மீண்டும் புதன்கிழமை காலை 9 மணிக்கு வடக்கு ரத வீதியில் இருந்து அவிநாசியப்பா் தேரோட்டமும், நிலை சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை அம்மன் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
தேரோட்டத்தை ஒட்டி, பல்வேறு அமைப்பினா் திருமண மண்டபங்களில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா், குடிநீா் ஆகியவற்றை வழங்கினா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...