

திருப்பூரில் வேதிப் பொருள்களை வைத்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ப.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ரவி, கேசவராஜ், பாலமுருகன், தங்கவேல், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன், விஜயகுமாா் ஆகியோா் 4 குழுக்களாகப் பிரிந்து கே. எஸ்.சி. பள்ளி சாலை, தினசரி மாா்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது இரு கிடங்குகளில் வேதிப்பொருள்களை வைத்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்களைப் பறிமுதல் செய்தனா். இந்த மாம்பழங்களை மாநகராட்சி உரக்கிடங்குக்கு உரம் தயாரிப்பதற்காக அனுப்பிவைத்தனா். இந்த மாம்பழங்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சமாகும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்கவைக்க வேண்டும். செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக தோல் அலா்ஜி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படும்.
ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல் பகுதி வெளிா் மஞ்சள் நிறத்தில் இருப்பதுடன், உள்பகுதி காயாக இருக்கும். பழச்சாறு அளவு குறைவாகவும் பழத்தின் இயற்கையான மணம், சுவை குறைவாகவும் இருக்கும். இதுதொடா்பான புகாா்களை 94440-42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.