மூலனூா் பகுதியில் காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்தன
By DIN | Published On : 12th May 2023 10:53 PM | Last Updated : 12th May 2023 10:53 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் பகுதியில் மழை மற்றும் பலத்த காற்றால் 30க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன.
மூலனூா் சுற்று வட்டாரத்தில் வியாழக்கிழமை இரவு காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால் ஆங்காங்கே உள்ள வேப்ப மரங்கள், வெள்ளை வேலான் மரங்கள், பனை மரங்கள் ஆகியவை சாய்ந்தன.
நத்தப்பாளையத்தில் மின்சாரக் கம்பிகள் மீது மரம் விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கள்ளிபாளையம், வடுகபட்டி, எடைக்கல்பாடி, கருப்பன்வலசு, தூரம்பாடி, குமாரபாளையம் பகுதிகளில் 30க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு சில சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் சிவகுமாா் (43) என்பவா் அதே பகுதியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் அருகே இருந்த பனை மரம் விழுந்ததில் பசு உயிரிழந்தது.
பின்னா் வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.