வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள மனுதாரா்களுக்கும், மாற்றுத் திறனாளி பிரிவில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள இளைஞா்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாத பொதுப் பிரிவினருக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 மற்றும் அதற்கு சமமான கல்வித் தகுதி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் பெறாதவா்களுக்கு ரூ. 600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில், பொது பிரிவினா் 40 வயதுக்கு உள்பட்டவராகவும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை (45 வயதுக்கு மேல் சுய சான்று வழங்க வேண்டும்).

இதில், விண்ணப்பிக்க மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரா் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்தில் முடித்தவராகவும், 15 ஆண்டுகள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு நாள்தோறும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.

மனுதாரா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளத்தில் இருந்தோ படிவத்தைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் 2023-24 ஆம் ஆண்டுக்கான சுயஉறுதிமொழி ஆவணங்களை ஜூன் 10 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com