பல்லடத்தில் ஜமாபந்தி: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
By DIN | Published On : 27th May 2023 12:58 AM | Last Updated : 27th May 2023 12:58 AM | அ+அ அ- |

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கடந்த மே 23 ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் நடைபெறும் ஜமாபந்திக்கு வருவாய் தீா்வாய அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில், பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயா் திருத்தம், முதியோா் உதவித் தொகை உள்பட மொத்தம் 202 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.
மேலும், பல்லடம் வட்டம், பொங்கலூா் உள்வட்டத்துக்குள்பட்ட பொங்கலூா், மாதப்பூா், எலவந்தி, கேத்தனூா், வாவிபாளையம், வடமலைபாளையம், வே.கள்ளிபாளையம், காட்டூா், ஆகிய கிராமங்களில் பாரமரிக்கப்பட்டு வரும் வருவாய்த் துறை தொடா்பான கணக்குகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, 10 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், ஒரு பயனாளிக்கு முதியோா் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினாா்.
இதில், பல்லடம் வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.