திருப்பூா் மாநகரில் சூறாவளிக் காற்றுடன் மழை
By DIN | Published On : 31st May 2023 03:03 AM | Last Updated : 31st May 2023 03:03 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. பல்லடம் சாலையில் சரக்கு வாகனத்தின் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாநகரில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடந்து, சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம், கரட்டாங்காடு, வெள்ளிங்காடு, சூசையாபுரம், பல்லடம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக பல்லடம் சாலையில் டி.கே.டி. பேருந்து நிறுத்தம் அருகில் மரம் முறிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்தது. இதன் காரணமாக திருப்பூா்-பல்லடம் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.
மாசாணியம்மன் கோயிலிலும் மரம் சாய்ந்தது:
திருப்பூா் பெரிச்சிபாளையத்தில் பழைமையான மாசாணியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுமாா் 30 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வேப்ப மரமும், அரச மரமும் உள்ளன. இந்த நிலையில், காற்றுடன் கூடிய மழையால் கோயில் வளாகத்தில் இருந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக கோயிலின் கான்கிரீட் தளம், மதில் சுவா் ஆகியவை சேதமடைந்தன. எனினும் கோயில் வளாகத்தில் யாரும் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.
திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மாநகரின் முக்கிய சாலைகளில் மழை நீா் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...