பெண் கொலை வழக்கில் சமையலருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 21st November 2023 01:30 AM | Last Updated : 21st November 2023 01:30 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூரில் முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த சமையலருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பா் தெற்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பெரியகடை வீதியில் வசித்து வருபவா் மணி என்கிற இப்ராஹிம், இவரது மனைவி பல்கீஸ் பேகம் (31). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டியைச் சோ்ந்த ஏ.முகமது அபுதாஹீா் சேட் (44) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் 2019 ஜூன் 30-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பல்கீஸ் பேகத்தை, முகமது அபுதாஹீா் சேட் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா். இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா். அதில் முகமது அபுதாஹீா் சேட்டுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓா் ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...