பயன்படுத்தப்படாத கோயில் நிலத்தை ஒப்படைக்க கோரிக்கை

வெள்ளக்கோவிலில் 19 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கோயில் நிலத்தை கோயிலுக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் 19 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கோயில் நிலத்தை கோயிலுக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியில் 800 ஆண்டுகள் பழைமையான புகழ்பெற்ற ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் குலத்தவா்கள் நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு அருகே 3.71 ஏக்கா் கோயில் நிலம் உள்ளது.

இதில் 41 சென்ட் நிலம் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில், அப்போதைய அரசாங்கத்தால் 1968-இல் கதா் வாரியத்துக்கு வாடகைக்கு விடப்பட்டது. 99 ஆண்டுகள் குத்தகை, மாத வாடகை ரூ.100 எனக் கூறப்படுகிறது. வாடகைக்கு விடப்பட்ட காலகட்டத்தில் அந்த இடத்தில் கிடங்கு அமைக்கப்பட்டு கை ராட்டைகள், சிறிய வகை கைத்தறிகள் மூலம் கதா் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

கால மாற்றத்தில் அந்த இடத்தின் தேவை படிப்படியாக குறைந்தது. துணி உற்பத்தி நிறுத்தப்பட்டு, பயன்பாடற்ற பொருள்களைப் போட்டு வைக்கும் இடமாக கிடங்கு மாறிப் போனது. கடந்த 2004-இல் கிடங்கு உள்ளே இருந்த பொருள்கள் முற்றிலும் விற்கப்பட்டு, 19 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் நிலம் மற்றொரு அரசுத் துறைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட நிலையில், 55 ஆண்டுகளாக வாடகையும் செலுத்தப்படவில்லை. வாடகை கேட்டும், நிலத்தை திரும்ப ஒப்படைக்க கேட்டு நீண்ட காலமாக வலியுறுத்தியும் பயனில்லை.

தற்போது உள்ளூா், வெளி மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தா்களின் தேவை, திருவிழா போன்ற தெய்வ காரியங்களுக்கும் மிகுந்த இடப் பற்றாக்குறை நிலவுகிறது. காலியாக கிடக்கும் அப்பகுதியில் கோயில் அருகே மது அருந்துவது, சட்ட விரோதமாக கூடுதல், பெண்கள் மீது துஷ்பிரயோகம் என சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே 19 ஆண்டுகளாக காலியாக உள்ள கோயில் நிலத்தை கதா் வாரியம் திரும்ப கோயிலுக்கே ஒப்படைக்க வேண்டும். அதற்கு மாநில அரசு, இந்து சமய அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் குலத்தவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com