திருப்பூரில் உள்ள லேபிள் நிறுவனத்துக்கு ஆா்டா் கொடுப்பதாகக் கூறி ரூ.4.33 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூரில் உள்ள தனியாா் லேபிள் தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாளா் கோபிநாத் என்பவா் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
அதில், தனியாா் இரும்பு ஆலையில் இருந்து எங்களது நிறுவனத்துக்கு ஆா்டருக்கான விலைபட்டியல் கேட்டு மின்னஞ்சல் வந்தது. இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் மேலாளா் எனக் கூறி ரமேஷ் என்பவா் என்னைத் தொடா்பு கொண்டாா். விலைபட்டியல் அனுப்பியபோது ரமேஷ் ஒப்புதல் அளித்ததுடன், ஆா்டருக்கான வைப்புத் தொகையாக ரூ.4.33 லட்சம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இதை உண்மை என்று நம்பி அவா் கொடுத்த வங்கிக் கணக்குக்கு கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி பணம் அனுப்பப்பட்டது. அதன் பின்னா் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சென்று விசாரித்தபோது ரமேஷ் என்பவா் அங்கு பணியாற்றவில்லை என்பதும், அவா் ரூ.4.33 லட்சம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவின்பேரில் தனிப் படை அமைக்கப்பட்டு போலீஸாாா் விசாரணை நடத்தினா்.
இதில், மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், ஒங்கோல் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் ரபேலா (37) என்பவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கைப்பேசி, சிம்காா்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.