உடுமலை அருகே சமுதாய நலக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலி

உடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் கொழுமம் பேருந்து நிலையத்தின் முன்பாக சமுதாய நலக்கூடம் உள்ளது. கொழுமம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சமுதாயநலக்கூடத்தில் பேருந்து வரும் வரையில் காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில், கொழுமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மணிகண்டன் (28), கெளதம் (29), முரளிராஜன் (35) ஆகியோர் பேருந்துக்காக திங்கள்கிழமை காத்திருந்தனர். 

இதனிடையே, உடுமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்திருந்ததால் சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து தொழிலாளர்களின் மீது விழுந்தது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அக்கம்பக்கத்தின் 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் குமரலிங்கம் காவல் துறையினரும், உடுமலை தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதன் பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டனர். ஆனால் மூச்சுத்திணறலால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து குமரலிங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com