பட்டியலின சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்
By DIN | Published On : 26th September 2023 01:20 AM | Last Updated : 26th September 2023 01:20 AM | அ+அ அ- |

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முட்டியங்கிணறு ஏ.டி.காலனி பொதுமக்கள்.
திருப்பூா்: திருப்பூரை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் அருகே பட்டியலின சமூகத்தினருக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தை தனி நபா் ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட முட்டியங்கிணறு ஏ.டி.காலனியில் வசிக்கும் பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.பி.ஆா்.மூா்த்தி தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
முட்டியங்கிணறு ஏ.டி.காலனியில் வசிக்கும் 20 பேருக்கு 50 சென்ட் நிலத்தை கடந்த 1947 ஆம் ஆண்டு எம்.சாமியப்பகவுண்டா் தா்மசாசன கிரையம் செய்து கொடுத்துள்ளாா். இந்த நிலத்தை தற்போது தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து விற்பனைக்கு வீட்டு மனைகளாகப் பிரித்துள்ளாா். எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டிக் குடியேற காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் பிரதான கதவைத் திறக்க வேண்டும்:
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மின்சார வாரிய அலுவலக நுழைவு வாயிலில் கழிவு நீா் சூழ்ந்துள்ளால் பிரதான கதவு பூட்டப்பட்டு புதா் மண்டிக்கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் அதிக திறன் கொண்ட மின்சார டிரான்ஸ்பாா்மா் மின்சார கம்பிகளுக்கு அடியில் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனா். மின்வாரிய அலுவலா்களும் இந்த வழியில்தான் சென்று வருகின்றனா்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதா்களை முழுமையாக அகற்றிவிட்டு உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தின் பிரதான கதவைத் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம் நிலத்தின் பட்டா மீதான தடையை நீக்கக்கோரி மனு:
மங்கலத்தை அடுத்த அக்ரஹாரபுத்தூரைச் சோ்ந்த ஆா்.எஸ்.பழனிசாமி என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மங்கலம் கிராமம், அக்ரஹாரபுத்தூரில் ஊா்கட்டு நத்தம் நிலத்தில் 300 க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த நிலங்களுக்கு கடந்த 1992 ஆம் ஆண்டு அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளது. இந்த நிலத்தில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான 34 சென்ட் நிலமும் உள்ளது.
பள்ளிவாசலுக்குச் சொந்தமான 557-1 என்ற புதிய க.ச.எண்ணைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக 166 ஏ என்று குறிப்பிட்டு பத்திரப்பதிவு நடவடிக்கையைத் வக்பு வாரியம் தடை செய்துள்ளது.
இதனால், ஒட்டுமொத்த கிராம மக்களும் நிலப்பரிவா்த்தனை செய்ய முடியாத நிலையில் உள்ளனா். எனவே, பள்ளி வாசலுக்குச் சொந்தமான நிலத்தை கண்டறிந்து, மற்ற நிலங்களின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
538 மனுக்கள் பெறப்பட்டன:
குறைகேட்புக் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 538 மனுக்கள் பெறப்பட்டன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...