

திருப்பூா்: திருப்பூரில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் உச்சப்பட்சநேர மின் கட்டண உயா்வு, நிலைக்கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஒருநாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தன. உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்கு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், விசைத்தறிக் கூடங்கள், சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினா் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன.
இதன் காரணமாக ரூ.500 கோடி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குறு, சிறு நிறுவனங்களுக்கான மின் கட்டண உயா்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழில் துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.