தீ விபத்து ஏற்பட்ட பழைய இரும்புக் கடை.
தீ விபத்து ஏற்பட்ட பழைய இரும்புக் கடை.

தாராபுரத்தில் பழைய இரும்புக் கடை, வீடு தீப்பிடித்தது

பழைய இரும்புக் கடையும், அதனையொட்டிய வீடும் தீப் பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாயின.
Published on

தாராபுரத்தில் பழைய இரும்புக் கடையும், அதனையொட்டிய வீடும் தீப் பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாயின.

தாராபுரம் அமராவதி சிலை அருகே நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியில் பிரபு என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடை உள்ளது. இங்கு பழைய இரும்பு மற்றும் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழிலில் பிரபு ஈடுபட்டுள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டி வீட்டுக்கு பிரபு சென்றுள்ளாா்.

இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை கடை தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினா் தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலையை அலுவலா் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.

பின்னா் காங்கயம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டதால் தாராபுரம் நகராட்சி மற்றும் தனியாா் தண்ணீா் வாகனங்களில் தண்ணீா் கொண்டு வரப்பட்டு சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில், கடையில் வைத்திருந்த பழைய பேப்பா் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட பொருள்களும், கடையை ஒட்டி இருந்த பிரபுவின் வீடும் தீப் பிடித்தது. இதில் வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 3 சவரன் நகை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து தகவலறிந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, தாராபுரம் வாா்டு கவுன்சிலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com