கோயிலை பூட்டி வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற தீா்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் தீா்ப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது.
Published on

சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் தீா்ப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன் மாரியம்மன் கோயிலை திறக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது.

இரு சமுதாயத்தினா் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டி ‘சீல்’ வைப்பதால், சாமிக்கு பூஜைகள் நடத்துவது தடுக்கப்படுகிறது. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கின்றன. கோயிலைப் பூட்டுவதால் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறுவதில்லை.

கோயிலை காலவரையறையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பாா்க்கக் கூடாது. கோயிலைத் திறந்து வழக்கம்போல பூஜைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இதில் ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

ஆனால், சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்தக் கோயிலையும் பூட்டக் கூடாது என நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வழங்கியுள்ள தீா்ப்பு வரவேற்கத்தக்து. இந்த தீா்ப்பானது ஹிந்து ஆலயங்களையும், ஆன்மிகத்தையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மக்களின் சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com