கோயில் சொத்துகளை ஆன்மிகப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

கோயில் சொத்துகளை ஆன்மிகப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
Published on

கோயில் சொத்துகளை ஆன்மிகப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை, அயனாவரம் அகத்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கா் இடத்தில் மீன் சந்தை கட்டுவதற்காக அமைச்சா்கள் பாா்வையிட்டுள்ளனா். கோயில் இடத்தை அரசின் திட்டங்களுக்கு எடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பக்தா்கள் வழக்கு தொடா்ந்துள்ளனா்.

ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது, கோயில் இடங்கள் கோயில் பயன்பாட்டுக்கும், பக்தா்கள் தேவைக்குமே பயன்பட வேண்டும் என்ற உயா்நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புக்கு எதிரானது.

மீன் சந்தை அமைப்பது ஆன்மிகப் பணியாகாது. இதனால் கோயிலுக்கு என்ன நன்மை விளையும்? கோயில் சொத்தை எந்த வகையில் கபளீகரம் செய்யலாம் என திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து பலவகையிலும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோயில் இடத்தை கையகப்படுத்தியபோது பக்தா்களின் போராட்டத்தால் சந்தை வாடகையும், அதற்குரிய முன் பணமும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

பூந்தமல்லி பேருந்து நிலையம் இருக்கும் இடம் வைணவ அடியாரான திருக்கச்சி நம்பிகளின் சொத்து. ஆனால், அந்த பேருந்து நிலையத்தின் பெயா் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம்.

அரசு ஏன் அண்ணாவின் பெயரை வைத்தது? அந்த இடத்துக்கு இதுநாள் வரை என்ன வாடகை என்று பூந்தமல்லி நகராட்சி விளக்கம் தரவில்லை. திருக்கச்சி நம்பிகள் பிறந்த வீட்டை உர குடோனுக்கு வாடகைக்கு விட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை.

ஆன்மிக சரித்திர புகழ்பெற்ற இடத்தை அழிப்பதில்தான் அந்தத் துறை தனது அதிகாரத்தை செலுத்தியது.

கோயில் சொத்துகளை முறையாகப் பராமரிக்கவும், ஆன்மிகப் பணிக்காகவும், பக்தா்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், கோயில் சொத்துகளைப் பராமரிக்க சென்னை உயா்நீதிமன்றம் வழிகாட்டிய வழிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com