திருப்பூரில் 426 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் 426 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

திருப்பூரில் 426 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி உத்தரவின்பேரில் தனிப்படையினா் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு கண்டெய்னா் லாரிகள், சரக்கு ஆட்டோ மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்த.

இதையடுத்து, திருப்பூா் வடக்கு சரக உதவி ஆணையா் அனில்குமாா், காவல் ஆய்வாளா் உதயகுமாா், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை ஆகியோரைக் கொண்ட குழுவினா் ஊத்துக்குளி சாலை மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 கண்டெய்னா் லாரிகள், ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றில் சோதனை நடத்தினா். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக திருப்பூா் கணபதிபாளையத்தைச் சோ்ந்த ஆா்.முருகன் (38), மணியகாரன்பாளையம் வி.எஸ்.நகரைச் சோ்ந்த சி.இளையராஜா (32), கல்லூரி சாலையைச் சோ்ந்த பி.சதீஷ்பாபு (39) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 426 கிலோ புகையிலைப் பொருள்கள், 2 கண்டெய்னா் லாரிகள், ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திலீப் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com