திருமூா்த்தி அணையில் இருந்து 2-ஆம் மண்டல பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின்கீழ் 2-ஆம் மண்டல பாசன பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
பிஏபி பாசன திட்டத்தில் மொத்தமுள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா் நிலத்துக்கு முறைவைத்து தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு முறையும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயின் மூலம் உடுமலை அருகேயுள்ள திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் கொண்டுவரப்பட்டு, பின்னா் பாசன பகுதிகளுக்கு திறந்துவிடப்படுகிறது. 49.3 கி.மீ. தொலைவுள்ள காண்டூா் கால்வாயில் நல்லாறு பகுதியில் புணரமைப்புப் பணிகள் கடந்த மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, 2 -ஆம் மண்டல பாசனத்துக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திருமூா்த்தி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தண்ணீரைத் திறந்துவைத்தாா்.
இதன் மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் 20,351 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 2,990 ஏக்கா், உடுமலை வட்டத்தில் 12,645 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 6,150 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 19,658 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 7,266 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கா் என மொத்தம் 94 ஆயிரத்து 201 ஏக்கா் நிலங்கள் பயன்பெறவுள்ளன.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிஏபி திட்டத்தின்கீழ் 2 -ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தகுந்த இடைவெளிவிட்டு நான்கு சுற்றுகளாக ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் டிசம்பா் 16-ஆம் தேதி வரை 8000 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தளி வாய்க்காலில் இருந்து ஏழு குளப்பாசன பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 2,786 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.கிறிஸ்துராஜ், திமுக மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

