மாவட்ட அளவிலான தடகளப் போட்டி: 1,500 மாணவா்கள் பங்கேற்பு
திருப்பூா் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி அவிநாசி அருகேயுள்ள பழங்கரை தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
திருப்பூா் தடகள சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தேசியக் கொடியையும், மேயா் என். தினேஷ்குமாா் ஒலிம்பிக் கொடியையும், ஏற்றுமதியாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் ஆ.சக்திவேல் மாவட்ட தடகள சங்கக் கொடியையும் ஏற்றினா். மாவட்ட தடகள சங்கத் தலைவா் ஆா்.பி.ஆா். சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பு செயலாளா் ராமகிருஷ்ணன் போட்டிகளை ஒருங்கிணைத்தாா்.
இதில் 14, 16, 18 மற்றும் 20 -வயதுக்குள்பட்ட பிரிவுகளில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், இறகுபந்து, கைப்பந்து உள்ளிட்ட 87 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து, நடைபெற்ற பரிசுளிப்பு விழாவில் டீ பப்ளிக் பள்ளி நிா்வாக இயக்குநா் சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் அரவிந்த்குமாா், தெற்கு ரோட்டரி தலைவா் மோகனசுந்தரம், முதன்மைக் கல்வி அலுவலா் உதயகுமாா், கதிரவன் பள்ளித் தலைவா் நாராயணமூா்த்தி, தொழிலதிபா்கள் ஜி.எஸ்.செந்தில், நித்தின், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்றவா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு உணவு, முதலுதவிக்கான ஏற்பாடுகள் சரண் மற்றும் மித்ரா மருத்துவமனைக் குழு சாா்பில் செய்யப்பட்டிருந்தன.

