உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: காங்கயத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
காங்கயம்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை காங்கயத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் இணைந்து, மாவட்ட அளவிலான 44 அரசுத் துறை அலுவலா்கள் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலா்கள் புதன்கிழமை காலை 9 மணி முதல் காங்கயம் தாலுகாவில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
காங்கயம் தாலுகாவுக்கு உள்பட்ட சிவன்மலை கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது, காங்கயம் நகராட்சி, ஏ.சி நகரில் 2,00,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, கழிவுநீா் கால்வாய் அமைத்தல், வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வீனம்பாளையம் பகுதியில் ஆதிதிராவிடா் காலனியில் வீட்டுமனை பட்டா வழங்குவது ஆகியவை
தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், மாவட்ட அளவிலான 44 அரசுத்துறை அலுவலா்கள் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கள ஆய்வு மேற்கொண்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்களிடம், அரசின் திட்டங்கள் குறித்தும், பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், தனி துணை ஆட்சியா் (சமூகப்பாதுகப்புத்திட்டம்) குமாரராஜா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

