நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை: கணக்கெடுப்பு நடத்துவதைத் தவிா்க்க கோரிக்கை

Published on

நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வாங்கிக்கொள்ள விருப்பமா என்று பொதுமக்களிடம் கணக்கெடுப்பு நடத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 196 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் ஒரு லிட்டா் பாமாயிலை மானிய விலையில் தமிழக அரசு விற்பனை செய்கிறது. அதாவது மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து பாமாயிலை லிட்டா் ரூ.100-க்கு இறக்குமதி செய்து நியாய விலைக் கடைகளில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பாமாயிலுக்கு கொடுக்கக் கூடிய மானியத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பாரம்பரிய எண்ணெய் வகைகளை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பது என்பது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

தற்போது நியாய விலைக் கடைகளில் பொதுமக்களிடம் எவ்வித கருத்துகளையும் கேட்காமல், கடை ஊழியா்களே விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அனுப்பிவைத்து வருகின்றனா்.

நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனையை அமல்படுத்தாமல் இருப்பதற்கு இதுபோன்ற கணக்கெடுப்புகள் காரணம் காட்டப்படும் என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவி வருகிறது.

எனவே, நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வேண்டுமா, வேண்டாமா என்று கருத்து கேட்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி நியாய விலைக் கடைகளில் கடலை எண்ணெய், தேங்காய் எண்னெணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com