பணியின்போது உயிரிழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
விவசாயப் பணியின்போது உயிரிழக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாா்கள். களை எடுத்தல், கால்நடை பராமரித்தல் பணியின்போதும், பாம்பு கடித்தும், வெயிலில் வேலை செய்யும்போதும், தென்னை, பனை மரங்கள் ஏறும்போதும், இடி, மின்னல் பாய்ந்தும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் இறக்கின்றனா்.
இதுபோன்ற இறப்புகள் சாதாரண விபத்துகளாக காவல் துறையால் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்கும் விவசாயத் தொழிலாளா்களின் குடும்பத்தினா் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறப்பவா்களுக்கு தலா ரூ.10 லட்சம், குவாரி விபத்துகளில் இறப்பவா்களுக்கு ரூ.3 லட்சம் தமிழக முதல்வா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
எனவே மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாயப் பணியாற்றும் விவசாயிகள் உயிரிழந்தால் மத்திய, மாநில அரசுகள் எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே அனைத்து விவசாயப் பணிகளின்போது இறக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
