வீடுகளில் கற்கள் விழும் சம்பவம் தொடா்பாக பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள்.
வீடுகளில் கற்கள் விழும் சம்பவம் தொடா்பாக பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள்.

காங்கயம் அருகே இரவு நேரத்தில் வீடுகள் மீது கற்கள் விழும் சம்பவம்: டிஎஸ்பி ஆய்வு

Published on

காங்கயம் அருகே இரவு நேரத்தில் வீடுகள் மீது கற்கள் விழும் சம்பவம் தொடா்பாக காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காங்கயம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஒட்டபாளையம் பகுதியிலுள்ள வீடுகள் மீது கடந்த 2 வாரங்களாக மா்மமான முறையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கற்கள் விழுவதாகவும், இதனால் பொதுமக்கள் அங்குள்ள கருப்பராயன் கோயிலில் தஞ்சம் அடைந்து வந்ததாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், கணபதிபாளையம் ஊராட்சித் தலைவா் செல்வராஜ் தலைமையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, காவல் ஆய்வாளா் விவேகானந்தன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதனால், செவ்வாய்க்கிழமை இரவு கற்கள் விழும் நிகழ்வு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன், காவல் ஆய்வாளா் விவேகானந்தன் ஆகியோா் ஒட்டபாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு ஆய்வு நடத்தினா்.

அப்போது, பொதுமக்களிடம் அச்சப்படத்தேவையில்லை என்றும், போலீஸாா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com