ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்டம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
திருப்பூா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை ஒன்றிணைத்து 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமங்களைத் தெரிவு செய்து மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடத்தப்படவுள்ளது. 16.07.2024 முதல் 13.09.2024 வரை 34 நாள்கள் மொத்தம் 77 முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதில், பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை சாா்பில் தீா்வு காணப்பட உள்ளது.
இந்த முகாம்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினா். பின்னா், முகாமில் தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, உடுமலை வட்டம் கொங்கல்நகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியையும், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி நகரில் சுதந்திரப் போராட்ட வீரா் தளி பாளையக்காரா் எத்தலப்பருக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நினைவரங்கம் அமைக்கும் பணியையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

