223 பயனாளிகளுக்கு ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்துக்கான பணி ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்
உடுமலை: உடுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 பேருக்கு ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.
திருப்பூா் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களுக்கு உள்பட்ட 223 பயனாளிகளுக்கு ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா மற்றும் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணை வழங்கும் விழா உடுமலையில் நடைபெற்றது.
இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, உடுமலை ஒன்றியத்திற்குள்பட்ட 74 பயனாளிகள், மடத்துக்குளம் ஒன்றியத்திற்குள்பட்ட 44 பயனாளிகள், குடிமங்கலம் ஒன்றியத்திற்குள்பட்ட 105 பயனாளிகள் என மொத்தம் 223 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.7.80 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை வழங்கினாா்.
மேலும், 287 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்கான ஆணைகளையும், 70 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணைகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் உடுமலை, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் அனைத்துத் துறைகள் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி மக்களை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

