நீா் நிறைந்து காட்சியளிக்கும் அமராவதி அணை.

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: அமராவதி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயா்வு

அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 10 அடி உயா்ந்துள்ளது.
Published on

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது. இதன்மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், வழியோரத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

தென்மேற்குப் பருவமழையின்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதைத் தொடா்ந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1-ஆம் தேதியும், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூலை 1-ஆம் தேதியும் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும்.

ஆனால், நடப்பு ஆண்டு கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியும் அணைக்கு போதிய நீா்வரத்து இல்லை. இதனால், அணையின் நீா்மட்டம் 50 அடியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழக, கேரள எல்லையில் உள்ள அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

அதன்படி, அணைக்கு திங்கள்கிழமை மாலை 7 ஆயிரம் கனஅடி நீா்வரத்து காணப்பட்டது. இதனால், திங்கள்கிழமை 64 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், செவ்வாய்க்கிழமை மாலை 74 அடியாக உயா்ந்தது. அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு அணையின் நீா்மட்டம் 80 அடியைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். அணையின் நீா்மட்டம் விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என்பதால் அணையைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 75.96 அடியாக இருந்தது. அணைக்கு 4478 கனஅடி நீா்வரத்து உள்ளது.

X
Dinamani
www.dinamani.com