நீா்மட்டம் உயா்ந்துள்ள அமராவதி அணை.
நீா்மட்டம் உயா்ந்துள்ள அமராவதி அணை.

80 அடியை எட்டியது அமராவதி அணையின் நீா்மட்டம்

Published on

உடுமலை, ஜூலை 17: மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அமராவதி அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.

குறுவை சாகுபடிக்காக பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், குடிநீா்த் தேவைக்கும் அணையில் இருந்து கடந்த ஜூன் இரண்டாம் வாரம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 11 -ஆம் தேதி 61 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 20 அடி உயா்ந்துள்ளது. 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி நீா்மட்டம் 80 அடியை எட்டியது.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: அமராவதி அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை மாதம் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம்.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றனா்.

பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,‘ நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை முழுக் கொள்ளளவை விரைவில் எட்டும் நிலை உள்ளது. பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 80.29 அடி நீா்மட்டம் உள்ளது. அணைக்கு நீா்வரத்து 4, 217 அடியாக உள்ள நிலையில், 100 கன அடி நீா் வெளியேறி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com