‘நத்தம் நிலங்களும் பத்திரப் பதிவு செய்யப்படுகின்றன’
பல்லடம், ஜூலை 18: இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நத்தம் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வருவதாக பத்திரப் பதிவு துறையினா் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலங்களை பத்திரப் பதிவு செய்ய முடியாது என அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், நத்தம் நிலங்களை கிரையம் செய்வது, அடமானம் மற்றும் ஒப்பந்தம் பதிவு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக பத்திர எழுத்தா்கள், பொதுமக்கள் தெரிவித்தனா்.
இது குறித்து பத்திர ஆவண எழுத்தா்கள் கூறியதாவது: நத்தம் நிலங்களை பத்திரப் பதிவு செய்யலாம் என அரசு உத்தரவிட்டதாகக் கூறப்படும் நிலையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே பத்திரப் பதிவு செய்ய முடியும் என பத்திரப் பதிவு துறையினா் தெரிவிக்கின்றனா். தொடா்புடைய நத்தம் நிலங்களை முழுமையாக இணையத்தில் பதிவேற்றம் செய்து பத்திரப் பதிவு பணிகள் தடையின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து பல்லடம் சாா் பதிவாளா் உமாமகேஸ்வரி கூறுகையில்,‘ நத்தம் நிலங்களுக்கு ஒதுக்கப்படும் புதிய சா்வே எண்கள் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நிா்ணயிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நத்தம் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.
