அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா்.
அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா்.

நிரம்பும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published on

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

90 அடி உயரம் உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.

இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கேரளம், மறையூா், கோவில்கடவு, காந்தலூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி 78 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், வியாழக்கிழமை மாலை 85 அடியை எட்டும் நிலை ஏற்பட்டது. வியாழக்கிழமை இரவுக்குள் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் அணையில் இருந்து மாலை 6 மணியளவில் உபரிநீா் திறக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஆயிரம் அடி நீா் திறக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் 3 ஆயிரம் அடியாக உயா்த்தப்பட்டது.

இதனால், திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அணையின் துணை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகிறோம். அணைக்கு உள்வரத்து அதிகரிக்கும் நிலையில் அந்த நீா் அப்படியே வெளியேற்றப்படும்.

பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதியில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா்.

அணையின் நீா்மட்டம்: 90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 85.17 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 4, 867 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com