அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து முழுக்கொள்ளளவை அடையும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது நீா்மட்டம் 89 அடியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக அணையில் இருந்து அமராவதி ஆற்றின் மூலம் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் நெல், கரும்பு, தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:
புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரதான கால்வாயில் 300 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமராவதி ஆற்றில் உபரி நீராக 1800 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. ஜூலை 25-க்குப் பிறகு தொடா்ந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது என்றனா்.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா் மட்டம் 89.08 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 1825 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3963.59 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. 875 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

