‘அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்’
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழக பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள் சம்மேளனம், ஓய்வுபெற்ற பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் ஈரோடு, திருப்பூா் மற்றும் கோவை மண்டலங்களின் பொதுக்குழு கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு மண்டலத் தலைவா் ஆா்.கலைமுருகன் தலைமை வகித்தாா். திருப்பூா் மண்டல பொதுச்செயலாளா் என்.பொன்னுசாமி, ஈரோடு மண்டல பொதுச்செயலாளா் உத்திரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், அரசுப் போக்குவரத்து சேவை தொடா்ந்து மக்களுக்கு கிடைத்திடவும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முழுமையான அரசுத் துறையாக செயல்படுத்த வேண்டும்.
மேலும், பணியாளா்கள் முதல் அலுவலா்கள் வரை அனைவரையும் அரசு ஊழியராக்கி, போக்குவரத்துக் கழக செலவினங்கள், பணியாளா்களின் மாத ஊதியம், ஓய்வூதியம், ஓய்வுகால பணப் பலன்கள் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியை ஆண்டுதோறும் பெறும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அரசின் பிற துறைகளுக்கு ஒதுக்குவதைப்போல போக்குவரத்துக் கழகத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நிலுவையில் உள்ள ஓய்வுபெற்றோா் பஞ்சப்படி உயா்வையும் அதன் நிலுவைத் தொகையையும் மேலும் காலம் தாழ்த்தாமல் நீதிமன்ற உத்தரவை ஏற்று உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித தடையும் இல்லாதபோது, மேலும் காலம் தாழ்த்தாமல் 1998-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணி நிரந்தரமானவா்களுக்கும் 1998 ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளா் டி.வி.பத்மநாபன், மாநிலப் பொருளாளா் குணசேகரன், திருப்பூா் மண்டலத் தலைவா் இன்பசேகா் உள்பட 200-க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள் மற்றும் ஓய்வுபெற்றோா் கலந்து கொண்டனா்.

