அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரைத் தேக்க தடுப்பணைகள்: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
வி.கே.ராஜமாணிக்கம்
உடுமலை, ஜூலை 30: பருமழைக் காலங்களில் அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் விதமாக தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. 90 அடி உயரமுள்ள இந்த அணையில் 4 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். மேற்குத் தொடா்ச்சி மலையில் 840 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு இதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன.
அமராவதி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து 192 கிலோ மீட்டா் பயணித்து கரூா் மாவட்டம், திருமுக்கூடல் எனும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
1958-ஆம் ஆண்டு அன்றைய முதல்வா் காமராஜரால் அமராவதி அணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என இரண்டு பருவமழைக் காலங்களிலும் சோ்த்து ஆண்டுக்கு 3 முறை அணை நிரம்பும் என்றும், ஆண்டுக்கு சுமாா் 20 டிஎம்சி தண்ணீா் வரத்து உள்ளது என்றும் அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு முறை அணை நிரம்பும்போதும் முழுக்கொள்ளளவான 4 டிஎம்சி தண்ணீா் உள்ளது என்று பொதுப்பணித் துறையியால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அணை நிரம்பும்போது உண்மையான நீா் இருப்பு 3 டிஎம்சியாகவே உள்ளது. இதற்கு நீண்ட காலமாக அணை தூா்வாரப்படாததுதான் காரணம்.
இந்நிலையில், நடப்பு ஆண்டு தாமதமாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தற்போதுவரை தொடா்ந்து பெய்து வரும் நிலையில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி
அணை நிரம்பியது. இதைத் தொடா்ந்து கடந்த 13 நாள்களாக அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் அணையில் இருந்து உபரிநீா் அப்படியே வெளியேற்றப்படும் நடைமுறை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணித் துறையினரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தண்ணீா் வீணாகக் கடலில் கலந்து வருவதுதான் விவசாயிகளுக்கு வேதனையாக உள்ளது.
ஆண்டு முழுவதும் ஆயக்கட்டு விவசாயிகள் அணையில் இருந்து நீரை எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலையில், பருவமழைக் காலங்களில் பல டிஎம்சி தண்ணீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
இந்தக் காரணங்களை அடிப்படையாக வைத்து அப்பா் அமராவதி என்ற பெயரில் ஒரு அணையைக் கட்ட 1965-ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் உயா் மட்ட அளவிலான பொறியாளா்கள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கினா்.
தொடா்ந்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகள் சந்திக்கும் இடமான கூட்டாறு என்ற இடம் தோ்வு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை இந்த அணையில் சேமித்து வைக்க முடியும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பொறியாளா்கள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தனா்.
ஆனால், இத்திட்டத்திற்கு கேரள அரசு கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருவதால் அப்பா் அமராவதி திட்டம் நீண்ட காலமாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமராவதி அணை தொடங்கி கரூா் வரை ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி பருவமழைக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீரைத் தேக்கினால், பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எனவே, பருவமழைக் காலங்களில் அமராவதி அணைக்கு வரும் உபரி நீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வீணான 3 டிஎம்சி தண்ணீா்:
நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஒரு சில நாள்களிலேயே (ஜூலை 18) அமராவதி அணை நிரம்பி வழியும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூலை 19-ஆம் தேதி 3681கனஅடி, 20-ஆம் தேதி 7469 கனஅடி, 21-ஆம் தேதி 2992 கனஅடி, 22-ஆம் தேதி 3111 கனஅடி, 23-ஆம் தேதி 3748 கனஅடி, 24-ஆம் தேதி 1404 கனஅடி, ஜூலை 25-ஆம் தேதி 5840 கனஅடி, 26-ஆம் தேதி 2923 கனஅடி, 27-ஆம் தேதி 3715 கனஅடி, 28-ஆம் தேதி 2007 கனஅடி, 29-ஆம் தேதி 2090 கனஅடி, 30-ஆம் தேதி 3673 கனஅடி வீதம் உபரிநீா் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமாா் 3 டிஎம்சி தண்ணீா் வீணாக ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

