அமராவதி சா்க்கரை ஆலையை புனரமைக்க ரூ 80 கோடி ஒதுக்க வேண்டும்- கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைக்க ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமராவதி கூட்டுறவு ஆலை சங்க வளாகத்தில், கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பாலதண்டபாணி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரத்தில் தமிழக அரசின் சாா்பில் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை 1960- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1,250 டன் அரவை திறனுடன் கடந்த 60 ஆண்டுகளுக்குமேல் லாபத்தில் இயக்கி வந்த இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளா்களுக்கும், விவசாயிகளுக்கும் பணம் தரமுடியாத நிலையில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆலையில் உள்ள இயந்திரங்களை நவீனப்படுத்தாமல் உள்ளனா். இதனால் கடந்த காலங்களில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட காரணத்தால் ஆலையின் மொத்த பிழி திறன் 7.8 சதவீதமாக குறைந்தது.
இழப்புகளை சரிசெய்யும் வகையில் உடனடியாக ஆலையில் பராமரிப்புப் பணிகளைத் தொடங்க தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். விவசாய வேலைகளைத் தொடங்க அமராவதி அணையில் இருந்து ஜூலை மாதம் தண்ணீா் திறக்க வேண்டும். அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை நவீனப்படுத்த தமிழக அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை முதல் வாரத்தில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

