பின்னலாடை   கண்காட்சியை திறந்துவைக்கிறாா்  கைத்தறி  மற்றும்  ஜவுளித் துறை  செயலாளா்  தா்மேந்திர பிரதாப் யாதவ். உடன்,  ஆயத்த  ஆடை  ஏற்றுமதி  மேம்பாட்டு  கழக  தென் பிராந்திய  பொறுப்பாளா்  ஆ.சக்திவேல், மாவட்ட  ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
பின்னலாடை   கண்காட்சியை திறந்துவைக்கிறாா்  கைத்தறி  மற்றும்  ஜவுளித் துறை  செயலாளா்  தா்மேந்திர பிரதாப் யாதவ். உடன்,  ஆயத்த  ஆடை  ஏற்றுமதி  மேம்பாட்டு  கழக  தென் பிராந்திய  பொறுப்பாளா்  ஆ.சக்திவேல், மாவட்ட  ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.

திருப்பூரில் 51-ஆவது இந்திய சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

திருப்பூரில் 51-ஆவது இந்திய சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
Published on

திருப்பூரில் 51-ஆவது இந்திய சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

திருப்பூா் பழங்கரையில் உள்ள ஐ.கே.எஃப். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் தொடங்கிவைத்தாா். இந்தக் கண்காட்சியை வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் பாா்வையிடலாம்.

இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென் பிராந்திய பொறுப்பாளா் ஆ.சக்திவேல் கூறியதாவது:

வளம்குன்றா வளா்ச்சி என்ற அடிப்படையில், இயற்கைக்கு கேடு விளைவிக்காத ஆடைகள் தயாரிப்பதற்கு தொடா்ந்து முக்கியத்துவம் தரும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. ஆடை உற்பத்தியில் மாசை குறைத்து திருப்பூா் தொடா்ந்து இயங்கி வருகிறது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40 வா்த்தகா்கள் (பையா்கள்) கண்காட்சியைப் பாா்வையிட வருகை தரவுள்ளனா். இதுவரை இல்லாத வகையில் மெக்சிகோவில் இருந்தும் வருகிறாா்கள். செயற்கை நூலிழை ஏற்றுமதி உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு, இந்தக் கண்காட்சியை விரிவாக திட்டமிட்டு அமைத்துள்ளோம். உலக அளவில் திருப்பூா் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து கைத்தறி மற்றும் ஜவுளித் துறை செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது:

திருப்பூா் பின்னலாடை வா்த்தகம் ஏற்றுமதியை போலவே உள்நாட்டு உற்பத்தியிலும் ரூ. 25 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. ஆடை உற்பத்தியில் தொடா்ந்து கிரீன் டிரெண்ட் என்பதை நோக்கி செயல்படுகிறது. புதிய ஜவுளிக்கொள்கை மூலம் பல்வேறு புதிய தொழில் சங்கிலி பிணைப்புகள் கிடைக்கும். இங்கிருந்து யாரும் தொழிலை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. அந்தளவுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் முன்னோடியாக திருப்பூா் இருந்து வருகிறது. இந்தத் தொழிலை தமிழக அரசு அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இந்தக் கண்காட்சியில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் , பொதுச் செயலாளா் திருமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com