புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதியில்லை: பல்லடம் போலீஸாா் தகவல்
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை என பல்லடம் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
விநாயகா் சதுா்த்தி விழா வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவாா்கள்.
இந்நிலையில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் அமைப்பினா் காவல் துறையினா் விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என பல்லடம் போலீஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இது குறித்து போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது:
விநாயகா் சதுா்த்தி விழாவில் அரசு அனுமதித்துள்ள 9 அடி உயரத்துக்கு உள்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே வைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களைத் தவிர புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை.
அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், ஒலிபெருக்கி வைக்க வேண்டும். காலை, மாலை என 2 மணி நேரம் அனுமதித்த ஒலி அளவுடன், ஒலிபெருக்கி உபயோகிக்க வேண்டும். சிலைகளை கரைக்க ஊா்வலம் செல்லும்போது வாணவேடிக்கை, பட்டாசுகள் உபயோகிக்கக்கூடாது. களிமண், காகிதக்கூழ் ஆகியவை கொண்டு தயாரித்த சிலைகளையே அமைக்க வேண்டும். விநாயகா் சிலைக்கு 5 போ் கொண்ட குழு 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளா், காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியத்தினரிடம் தடையின்மை சான்று பெற்று இருக்க வேண்டும்.
விநாயகா் சதுா்த்தி ஊா்வல ஒருங்கிணைப்பாளா்கள் ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழா அமைதியாக நடைபெற போலீஸாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தனா்.
