சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: முதல் கால யாக வேள்வி தொடக்கம்
சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக வேள்வி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் ஸ்ரீ வாலீஸ்வரா் கோயில் 1,000 ஆண்டுகள் பழைமையானது.
இக்கோயில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பா் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு புதன்கிழமை மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதில், அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, கூனம்பட்டி சரவண ராஜமாணிக்க சுவாமி, பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை முதல்வா் ஸ்ரீ சுந்தரமூா்த்தி சிவம் ஆகியோா் பங்கேற்று அருளுரை வழங்கினா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை வரை மூன்று கால யாக வேள்வி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 4-ஆம் கால யாக பூஜையும், காலை 7.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கும்பாபிஷேகமும், பின்னா் பரிவார தெய்வங்கள், மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7 மணி முதல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.