திருமுருகன்பூண்டியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதியில் குடிநீா், சாக்கடை கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதியில் குடிநீா், சாக்கடை கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், அவிநாசி சாலை அண்ணா நகரிலிருந்து திருமுருகன்பூண்டி பாலம் வரை எரியாத சோலாா் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும். அதேபோல அப்புறப்படுத்தப்பட்ட மின்விளக்குகளுக்கு பதிலாக புதிய விளக்குகள் உடனடியாக பொருத்த வேண்டும். மாரியம்மன் கோயிலில் இருந்து வடக்கு ராக்கியாபாளையம் சந்திப்பு சாலை வழியாக பாரதி நகா் வடக்கு பகுதிகளுக்கு புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். ராசாத்தா கோயில் குளத்தில் சாக்கடை நீா் கலக்காமல் தடுத்து குளத்தை பாதுகாக்க வேண்டும். பெட்ரோல் பங்க் எதிரே குளம்போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். அண்ணா நகரில் வரும் சாக்கடை கழிவுநீா் மழைக் காலங்களில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்து மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். நல்லாற்று பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டடங்களை நீதிமன்ற உத்தரவின் படி அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியம், காமராஜ், கிளைச் செயலாளா் ராஜ், பொறுப்பாளா் ஈஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம், வாலிபா் சங்க ஒன்றியத் தலைவா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com