மாநகரில் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத் தொகை

Published on

திருப்பூா் மாநகராட்சிக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன்படி அரையாண்டுக்கான சொத்து வரியை அரையாண்டு தொடங்கும் முதல் 30 நாள்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு, 5 சதவீத ஊக்கத்தொகையும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மேலும், பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரி மற்றும் கட்டணங்களை திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், 4 மண்டலஅலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகா் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ நேரடியாக செலுத்தலாம். இணையவழியிலும் எளிய முறையில் வரியை செலுத்தும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருப்பூா் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட 1,61,562 சொத்து உரிமையாளா்கள் 2023-24, 2024-25-ஆம் ஆண்டுகளுக்கு சொத்து வரி செலுத்தி ரூ.1.57 கோடி ஊக்கத் தொகை பெற்றுள்ளனா். எனவே, 2024-25-ஆம் ஆண்டுக்கு தங்களது சொத்து வரியை செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com