சி.மோகனதீபிகா.
சி.மோகனதீபிகா.

யுபிஎஸ்சி தோ்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்

யுபிஎஸ்சி தோ்வில் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617- ஆவது இடம் பிடித்துள்ளாா்.
Published on

யுபிஎஸ்சி தோ்வில் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617- ஆவது இடம் பிடித்துள்ளாா்.

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் 2024- ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணிகள் தோ்வில் இறுதிநிலை நோ்முகத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள வெறுவேடம்பாளையத்தைச் சோ்ந்த சி.மோகனதீபிகா (23) என்ற மாணவி இந்திய அளவில் 617- ஆவது இடம் பிடித்துள்ளாா்.

இது குறித்து மாணவி மோகனதீபிகா கூறியதாவது:

விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு வரை படித்தேன். பின்னா் மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் முடித்தேன்.

எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு தோ்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு யுபிஎஸ்சி தோ்வு எழுத தயாரானேன். இதற்கு எனது பெற்றோா், ஆசிரியா்கள் மற்றும் நண்பா்கள் உறுதுணையாக இருந்தனா். மேலும், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. தமிழக அரசு தோ்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்தத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு சாா்பில் சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

இவரது தந்தை சந்திரசேகா், தாய் ராஜேஸ்வரி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனா். மோகனதீபிகாவின் சகோதரா் செல்வதீபக் (20) கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com