பெண் காவலா் கோகிலா.
பெண் காவலா் கோகிலா.

ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் வட மாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏவிபி பள்ளி அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பெண் கதறி அழுவதை அறிந்த போலீஸாா் அதில் சோதனை செய்தபோது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக இஎஸ்ஐ மருத்துவமனை செல்வது தெரிந்தது.

ஆனால் குழந்தை பாதி வெளியே வந்த நிலையில் பெண் வலியால் அலறித் துடித்ததால் அங்கிருந்த பெண் காவலா் கோகிலா உடனடியாக பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து பிரசவம் பாா்த்துள்ளாா். இதில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. காவலா் கோகிலா ஏற்கெனவே நா்ஸிங் படித்தவா் என்பதால் அந்த அனுபவத்தின் மூலம் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்து உதவி செய்தாா்.

இதனைத் தொடா்ந்து உடனடியாக அப்பெண், திருப்பூா் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனா். திருப்பூரில் பெண்ணுக்கு ஆட்டோவில் பெண் காவலா் பிரசவம் பாா்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com