அவிநாசி கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, அவிநாசி பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று காா்த்திகை தீபம் வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி சுவாமிக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து இரவு கோயில் முன்புறம் உள்ள கம்பத்தில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் அம்பாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தீப தரிசனம் செய்து அவிநாசியப்பரை வழிபட்டனா்.
இதேபோல திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், பழங்கரை பொன் சோழிஸ்வரா் கோயில், கருவலூா் கங்காதீஸ்வரா் கோயில், சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

