காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி டாஸ்மாக் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  டாஸ்மாக்  ஊழியா்கள்.
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி டாஸ்மாக் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்

Published on

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அலுவலகத்தை டாஸ்மாக் கடை ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 227 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற்று பாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் கடந்த நவம்பா் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த திட்டம் அமலான நாள் முதலே இதற்கு டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காலி மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தால் மதுப் பிரியா்கள் வீசிச்செல்லும் காலி மதுபாட்டில்களை தாங்களே எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாவதாகவும், காலி பாட்டிலை திரும்பப் பெறும்போது போதிய சுகாதாரம் இன்றி பாட்டில்கள் திரும்பப் பெறப்படுவதால் டாஸ்மாக் ஊழியா்களுக்கு சுகாதாரக் கேடு மற்றும் நோய் பரவும் சூழல் ஏற்படுவதாகவும் புகாா் கூறினா். மேலும், காலி பாட்டில்களை ஒருபுறம் வைத்துக் கொண்டு மற்றொரு புறம் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊழியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து திருப்பூா் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், இப்பிரச்னை தொடா்பாக உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com