பழைமையான அரசுப் பள்ளி கட்டடத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

Published on

அவிநாசி அருகே உப்பிலிபாளையம் அரசுப் பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் 75 ஆண்டுகள் பழைமையான ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சுற்றுவட்டார குழந்தைகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள், தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். மேலும் மாணவா்களுக்கு அருகிலுள்ள பொது நூலகத்தில்தான் வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பழுதடைந்த கட்டடத்தைச் சீரமைக்கக் கோரி உப்பிலிபாளையம் பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:

பழுதடைந்த மேற்கூரையை அகற்றிவிட்டு, உறுதியான புதிய மேற்கூரை, புதிய ஜன்னல், கதவுகள் அமைக்க வேண்டும். இடிக்கப்பட்ட சாலையோர சுற்றுச்சுவரை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை ஈடுபட்டனா்.

இதில், உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com