சேவூா் பெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு காா்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு
சேவூரில் பழமை வாய்ந்த கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், அழகப் பெருமாள், சௌரிராஜப்பெருமாள் எனப் போற்றப்படுவதுமான சேவூா் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் விளங்குகிறது.
முற்காலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள், அடுத்தபடியாக பெருமாளை தரிசிப்பதற்கு சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாளை தரிசிப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் 20 ஆண்டுகளாக அரசு நிதி, உபயதாரா்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் நிறைவடைந்து, கடந்த 30-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கோயில் முன்பகுதியில் உள்ள விளக்குத் தூணில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

